பெங்களூரு வான்வெளி கண்காட்சி முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு முயற்சி
பெங்களூரு வான்வெளி கண்காட்சி முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு முயற்சி
ADDED : பிப் 13, 2025 10:50 PM

சென்னை:கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறும் மத்திய அரசின் வான்வெளி துறை கண்காட்சியால், தமிழக ராணுவ தொழில் பெரு வழித்தடத்தில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆகிய ஐந்து முனையங்களை உள்ளடக்கி, தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், ராணுவ தொழில் பெரு வழித்தடம் அமைக்கிறது.
ராணுவ சாதனங்கள்
அதன்படி, இந்த வழித்தடத்தில், வான்வெளி மற்றும் ராணுவ துறைக்கான சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆளில்லா விமானம் உட்பட ராணுவ துறையில் பயன்படுத்தும் சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கும் நவீன சோதனை மையங்கள், பொது வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவை மாவட்டத்தில் வாரப்பட்டியில் ராணுவ உபகரண தொழில் பூங்கா, சூலுாரில் வான்வெளி தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், வான்வெளி மற்றும் ராணுவ கண்காட்சியை மத்திய அரசு நடத்துகிறது. இதில், அந்த துறைகளை சேர்ந்த பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் தயாரிப்புகள் இடம்பெற்ற கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளன.
அந்நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, டிட்கோவும் அரங்கு அமைத்துள்ளது. இந்த கண்காட்சி வாயிலாக, இந்தியாவில் வான்வெளி மற்றும் ராணுவ துறையில் தொழில் துவங்க, 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரான்ஸ் பிரதிநிதிகள்
இந்நிறுவனங்களின் முதலீட்டை, தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தில் ஈர்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக, தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், 'டிட்கோ' மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி, திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அடங்கிய குழு, கடந்த இரு தினங்களாக பேச்சு நடத்தி வருகிறது.
இக்குழு, மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., 'ஜிபாஸ்' எனப்படும் பிரான்ஸ் நாட்டு தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன், தமிழகத்தில் தொழில் துவங்க பேச்சு நடத்திஉள்ளது.