ADDED : ஜன 17, 2025 11:14 PM

சென்னை:சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டின் வாயிலாக பசுமை மின்சாரம், மின் வாகனம், 'மெட் டெக்' உள்ளிட்ட துறைகளில் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
டாவோஸ் நகரில், வரும் நாளை மறுதினம் முதல் 24ம் தேதி வரை, உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக, மாநாடு நடக்கும் நான்கு நாட்களில், 50 கூட்டங்கள் வாயிலாக பல்வேறு தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடன் அரசு குழு பேச்சு நடத்துகிறது.
மேலும், மாநாட்டில், தமிழக தொழில் சூழலை வெளிப்படுத்தும் கண்காட்சி அரங்கை, 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம் அமைக்கிறது.