ADDED : பிப் 16, 2025 10:46 PM

புதுடில்லி:இந்தியா முழுதும் 29,500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்கு வரத்து அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த ஜனவரி 29 வரையிலான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் 29,500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக புதுடில்லி யில் 4,882 ட்ரோன்கள் பதிவாகிஉள்ளன.
இதைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் பதிவு தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் முறையே 4,588 மற்றும் 4,132 ஆக உள்ளது.
இதுவரை, ஒழுங்குமுறை ஆணையம் வெவ்வேறு ஆளில்லா விமான அமைப்பு மாதிரிகள் அல்லது ட்ரோன்களுக்கு 96 வகை சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அவற்றில் 65 வகை விவசாய நோக்கத்திற்கானது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு ட்ரோனுக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தால் இயக்கப்படும் டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்மில் இருந்து ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.
ட்ரோன்களை இயக்கு வதற்கு மூன்று மண்டலங்களை விமான போக்கு வரத்து ஒழுங்குமுறை ஆணையம் வரையறுத்துள்ளது. பச்சை மண்டலத்தில் ட்ரோன்களை இயக்க முன் அனுமதி தேவையில்லை.
அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து கட்டுபாட்டுக்குள்ளான மஞ்சள் மண்டலத்தில் ட்ரோன்களை இயக்க அங்கீகாரம் தேவை. மேலும், சிவப்பு மண்டலத்தில் ட்ரோன்களை இயக்க மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட வேண்டும்.