இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் இன்ஜினாக தமிழகம் உள்ளது: அமைச்சர் ராஜா பெருமிதம்
இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் இன்ஜினாக தமிழகம் உள்ளது: அமைச்சர் ராஜா பெருமிதம்
ADDED : பிப் 15, 2024 02:16 AM

சென்னை: ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, 'இசட் எப்' குழுமம், கார், வர்த்தக வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இது, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 1,800 கோடி ரூபாய் முதலீட்டில், வாகனங்களுக்கு, 'பிரேக்கிங் சிஸ்டம்' உள்ளிட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. இதை, அமைச்சர் ராஜா நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, இசட் எப் குழுமத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் பீட்டர் லெய்ர் கூறியதாவது:
ஒரகடத்தில், 44 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது, எங்கள் குழுமத்திற்கு இந்தியாவில் உள்ள, 19வது தொழிற்சாலை. தமிழகத்தில், 10வது தொழிற்சாலை.
எங்கள் நிறுவனத்திற்கு, இந்தியா முக்கிய மூலதன சந்தையாக திகழ்கிறது. ஓரடகம் தொழிற்சாலை அமைக்கும் பணி, 2022 இறுதியில் துவங்கி, 14 மாதங்களில் முடிவடைந்தது. இந்த ஆலை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ராஜா பேசியதாவது:
இசட் எப் குழுமம், தொழிற்சாலை அமைக்க தமிழகத்தை தேர்வு செய்ததற்கு நன்றி; ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், திறன்மிகு மையங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மோட்டார் வாகனம், மின்சார வாகன துறைகளின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள சிறுவனுக்கும் தரமான கல்வி கிடைக்கவும், படித்து முடித்த பின் வேலை கிடைக்கவும், 'நான் முதல்வன்' உட்பட பல்வேறு திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் இன்ஜினாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

