எளிதாக வணிகம் செய்யும் சூழல் தமிழகம், கேரளாவுக்கு விருது
எளிதாக வணிகம் செய்யும் சூழல் தமிழகம், கேரளாவுக்கு விருது
ADDED : நவ 12, 2025 11:15 PM

புதுடில்லி: எளிதாக வணிகம் செய்யும் சூழலை உரு வாக்கும் வணிக சீர்திருத்தங்கள் செயல்பாட்டு திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் விருது வழங்கினார். இதில் விரைவாக முன்னேறும் பிரிவில் கேரளாவுக்கும், முயற்சிக்கும் பிரிவில் தமிழகத்துக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை நடத்திய 'உத்யோக் சமாகம் 2025' மாநாடு டில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பி.ஆர்.ஏ.பி., எனும் 'வணிக சீர்திருத்தங்கள் செயல்பாட்டு திட்டம் 2024'ன் செயல்பாடுகளை ஆராய்ந்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருது வழங்கப்பட்டது. மொத்தம் 25 சீர்திருத்த வகைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டது.
இதில் வணிகம் துவங்குதல், கட்டுமான அனுமதிகள், தொழிலாளர் மேம்பாடு மற்றும் நில நிர்வாகம் ஆகிய நான்கு பிரிவுகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்காக தமிழகம் சிறந்த செயல்பாட்டாளராக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
'வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை உருவாக்கி வரும் தமிழக அரசின் முயற்சிக்கு இந்த அங்கீகாரம் வலுசேர்த்துள்ளது,' என மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா தெரிவித்துள்ளார்.

