
நறுமண பொருட்களில் சேர்க்கப்படும்
அதிகபட்ச காரீயம் மாற்றி அமைப்பு
ஐக்கிய நாடுகளின் சர்வதேச உணவு தரப்படுத்துதல் அமைப்பான கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷன், நறுமண பொருட்களுக்கான அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காரீயத்தின் அளவை மாற்றி அமைத்துள்ளது. மனித உடலுக்கு காரீயத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் விதமாக ரோமில் நடைபெற்று வரும் மாநாட்டில் இதனை முன்மொழிந்துள்ளது. இதன்படி, நறுமண பொருட்களில் அதிகபட்சமாக, கிலோவுக்கு 2.5 மில்லி கிராமும், மூலிகை மசாலா பொருட்கள், குறிப்பாக இலவங்கப்பட்டைக்கு கிலோவுக்கு 2 மில்லி கிராம் அளவுக்கு மட்டுமே காரீயம் சேர்க்க வேண்டும்.
எல்.பி.ஜி., டீசலுக்கு மாற்று எரிபொருள்
மஹா.,வில் சோதனை முறையில் துவக்கம்
மஹாராஷ்டிராவின் சாகர்வாடியில் கார்பன் டை ஆக்ஸைடை, டைமெத்தில் ஈத்தராக மாற்றும் ஆலையை சோதனை முறையில், கோதாவரி பயோரீபைனரிஸ் துவங்கி உள்ளது. மெத்தாக்ஸிமெத்தேன் என்று அழைக்கப்படும், டைமெத்தில் ஈத்தர், எல்.பி.ஜி., மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளாக கருதப்படுகிறது. மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி உடன் இணைந்து துவங்கப்பட்ட இந்த ஆலை, உலகளவில் கார்பன் டை ஆக்ஸைடை, டைமெத்தில் ஈத்தராக மாற்றும் முதல் அடியாக கருதப்படுகிறது.
பூஷண் ஸ்டீலின் 50% பங்குகளை
விற்க ஜே.எஸ்.டபுள்யு.,திட்டம்
தன் துணை நிறுவனமான பூஷண் பவர் அண்டு ஸ்டீலின் 50 சதவீத பங்குகளை விற்று, 15,000 - 16,000 கோடி ரூபாயை திரட்ட ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் திட்டமிட்டு உள்ளது. பங்குகள் விற்பனை தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடன் ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் பேச்சு நடத்தி வருகிறது. இதனிடையே, ஜப்பானை சேர்ந்த ஜே.எப்.இ., ஸ்டீல், பூஷண் பவர் அண்டு ஸ்டீல் நிறுவன பங்குகளை வாங்குவதில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

