ADDED : ஜூலை 15, 2025 06:12 AM

சென்னை; ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து, தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்க, அந்நாட்டின் ஒசாகா நகரில், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அமைச்சர் ராஜா துவக்கி வைத்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், 'எக்ஸ்போ 2025' உலக தொழில் கண்காட்சி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு முதலீடு களை ஈர்க்க, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் அதிகாரிகள் குழு, ஒசாகா நகருக்கு சென்றுள்ளது.
ஒசாகா நகரில், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அமைச்சர் ராஜா துவக்கி வைத்துஉள்ளார். அமர்வில் உள்ள அதிகாரிகள், ஜப்பான் தொழில் நிறுவனங்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அரசு அளிக்கும் சலுகை உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, முதலீடுகளை ஈர்க்கும்.
இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கையில், ''தமிழகத்தில், 580க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. ஜப்பானின் ஒசாகா, ஹிரோஷிமா, எஹிம் போன்ற நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
''ஜப்பானில், வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வு திறக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு, புதிய முதலீட்டாளர்களுக்கு சக்தி வாய்ந்த தொடர்பு புள்ளியாக இருக்கும்'' என, தெரிவித்துள்ளார்.