விமான தயாரிப்பில் முதலீடு ஈர்க்க ஜெர்மனி சென்றது தமிழக குழு
விமான தயாரிப்பில் முதலீடு ஈர்க்க ஜெர்மனி சென்றது தமிழக குழு
ADDED : டிச 03, 2024 11:24 PM

சென்னை:விமானங்கள் மற்றும் விமான இன்ஜின் உற்பத்தி தொழிலில், முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜெர்மனி சென்றுள்ளது.
வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் முதலீட்டை ஈர்க்க, தமிழக வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை, தமிழக அரசு 2022ல் வெளியிட்டது.
அடுத்த 10 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், நேரடி மற்றும் மறைமுகமாக, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இதில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க வசதியாக, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், கோவை மாவட்டம், சூலுாரில், சிறப்பு தொழில் பூங்காவை அமைத்து வருகிறது.
விமானங்களுக்கான முக்கிய பாகங்கள், வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஜெர்மனியில் அதிகம் உள்ளன.
அந்நிறுவன நிர்வாகத்தை சந்தித்து, முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக, அமைச்சர் ராஜா மற்றும் 'கெய்டன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு ஜெர்மனி சென்றுள்ளது.