ADDED : மார் 21, 2025 11:25 PM
சென்னை; தமிழக சுற்றுலாத் துறை சார்பில், சுற்றுலா முதலீடுகளை ஈர்க்க, 'தமிழ்நாடு பயண சந்தை - 2025' துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த விழாவை, அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நாளை வரை பயணச் சந்தை நடக்க உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், தங்கும் விடுதி நிறுவனங்கள் சார்பில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இன்றும், நாளையும் பகல், 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
விழாவில், அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''கடந்த ஆண்டில், 30 கோடிக்கும் அதிகமான, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர், தமிழகம் வந்து உள்ளனர்.
''மருத்துவ சுற்றுலாவிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதை விரிவுப்படுத்த, விரைவில் தனி நிறுவனத்தை துவக்க உள்ளோம்,'' என்றார்.