கடன் உத்தரவாத திட்ட தொகைக்கு நகையை பிணையாக கேட்கக்கூடாது ரிசர்வ் வங்கியிடம் 'டான்ஸ்டியா' வலியுறுத்தல்
கடன் உத்தரவாத திட்ட தொகைக்கு நகையை பிணையாக கேட்கக்கூடாது ரிசர்வ் வங்கியிடம் 'டான்ஸ்டியா' வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2025 10:38 PM

சென்னை:'கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் கடன் வாங்குவோர், விருப்பப்பட்டு தங்கம், வெள்ளியை பிணையாக வைப்பதை வங்கிகள் ஏற்கலாம் என்ற அறிவுறுத்தலை, ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும்' என, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டான்ஸ்டியா பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டத்தின் கீழ் வங்கிகள், 5 கோடி ரூபாய் வரை எவ்வித பிணையும் இல்லாமல் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை பின்பற்றாமல், பல வங்கிகள் தொழில்முனைவோரிடம் பிணை வாங்குகின்றன.
இந்த சூழலில், தற்போது, 'தங்கம், வெள்ளியை அடமானமாகப் பெற்றுக்கொண்டு வங்கிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது விதிமுறைகளை மீறாது; கடன் வாங்குவோர் தாமாக முன்வந்து தங்கம், வெள்ளியை அடமானமாக அளித்தாலும் வங்கிகள் ஏற்கலாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, பிணையில்லாமல் கடன் வழங்குவதை நீர்த்துப் போகச் செய்யும். கடன் வாங்குவோர் விருப்பப்பட்டு தங்கம், வெள்ளி வழங்கினால் ஏற்கலாம் என்று கூறுவதை, வங்கிகள் கட்டாயப்படுத்தி வாங்கும்.
எனவே, இந்த அறிவிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்க்கக் கூடாது. எனவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.