ADDED : ஜூலை 20, 2025 02:31 AM

புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியின் இவெக்கோ என்ற வர்த்தக வாகன நிறுவனத்தை கையகப்படுத்த, அதன் தாய் நிறுவனமான எக்ஸ்சர் என்ற நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பெராரி, ஸ்டெலாண்டிஸ் உள்ளிட்ட வாகன நிறுவனங்களை நிர்வகிக்கும் அக்னிலீ குடும்பத்தின் கீழ், இந்த எக்ஸ்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இவெக்கோ நிறுவனம், லாரி, பஸ் மற்றும் அதற்கான இன்ஜின்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ், ராணுவ வாகனங்களை உற்பத்தி செய்யும் ராணுவப் பிரிவும் உள்ளது.
இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு, 38,000 கோடி ரூபாயாகும். இதில் ராணுவ பிரிவின் மதிப்பு மட்டும், 17,000 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், வர்த்தக வாகன பிரிவை மட்டும் கையகப்படுத்த, டாடா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தை, கையகப்படுத்தினால், டாடா வர்த்தக வாகன பிரிவை, ஐரோப்பிய சந்தைக்கு விரிவுபடுத்த உதவியாக இருக்கும்.
இவெக்கோ நிறுவனம், ஐரோப்பாவின் சிறிய வர்த்தக வாகன நிறுவனம் ஆகும்.