ADDED : மே 27, 2025 10:20 PM

பெங்களூரு:விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ் நிறுவனம், டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் முதல் தனியார் ஹெலிகாப்டர் ஆலையை கட்டமைக்க உள்ளது. இது, உலக அளவில், ஏர்பஸ் நிறுவனத்தின் நான்காம் உற்பத்தி ஆலை ஆகும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் இந்த ஆலை, கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள கோலார் பகுதியின் வெமகல் தொழிற்பேட்டையில் அமைய உள்ளது. இங்கு, உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஏர்பஸ் நிறுவனத்தின், 'ஹெச்125' என்ற போக்குவரத்து ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு, முதற்கட்டமாக ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும்.
அண்மையில் இங்கு, விமானங்கள் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள, 29 கோடி ரூபாய் மதிப்பில், 7.40 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை டாடா நிறுவனம் கையகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, கர்நாடகா இந்த வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளது.