ADDED : ஏப் 06, 2025 01:00 AM

மும்பை:டாடா குழுமத்தின் வங்கி அல்லாத நிதி சேவை வணிகப்பிரிவான டாடா கேப்பிடல், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 15,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, செபியிடம் ரகசிய முறையில் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் 723 கிளைகளை கொண்ட டாடா கேப்பிடல், மொத்த, சில்லரை கடன் பிரிவில், தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் சேவைகளை அளித்து வருகிறது.
கடந்த பிப்., 25ம் தேதி, ஐ.பி.ஓ., வாயிலாக முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனையுடன், 23 கோடி புதிய பங்குகளையும் விற்பனை செய்ய இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஒப்பு தல் அளித்து இருந்தது.
கடந்த 2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, டாடா கேப்பிடல் நிறுவனத்தின் 92.83 சதவீத பங்குகள், டாடா சன்ஸ் வசமும், மீதமுள்ள பங்குகள் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களின் வசமும் உள்ளன.
வங்கி அல்லாத நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்கள், மூன்று ஆண்டுக்குள் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவை பின்பற்றி, டாடா குழுமம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் முடிவை எடுத்து உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடந்தாண்டு ஜனவரியில் டாடா கேப்பிடல் பைனான்சியல் சர்வீஸ், டாடா கேப்பிடல் நிறுவனத்துடன் இணைந்தது.
கடந்த 2022ல், சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, ரகசிய முறையில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் வரை, நிறுவனங்கள் தம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து வைத்திருக்க முடியும்.