ஏப்ரல் வர்த்தக வாகன விற்பனை ரிவர்ஸ் கியரில் டாடா, லேலாண்டு
ஏப்ரல் வர்த்தக வாகன விற்பனை ரிவர்ஸ் கியரில் டாடா, லேலாண்டு
ADDED : மே 02, 2025 09:22 PM

சென்னை:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 0.18 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 72,637 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஏப்ரலில், 72,501 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
நாட்டின் முன்னணி வர்த்தக வாகன நிறுவனங்களான, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்டு ஆகிய நிறுவனங்கள், விற்பனையில் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன.
டாடா நிறுவனத்தின் கனரக வாகன விற்பனை, 8 சதவீதமும்; இலகுரக வாகன விற்பனை, 23 சதவீதமும் சரிவை கண்டுள்ளன. ஆனால், நடுத்தர ரக மற்றும் பயணியர் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை முன்னேற்றம் அடைந்துள்ளது. கனரக மற்றும் நடுரக வாகனங்களின் விற்பனை, 14 சதவீதம் சரிந்துள்ளன.
மஹிந்திரா நிறுவனம், 2 டன்னுக்கு குறைவான இலகுரக வாகன விற்பனையில், 21 சதவீத சரிவை கண்டுள்ளது. 2 டன்னுக்கு அதிகமான வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதிகபட்சமாக, மாருதியின் இலகுரக வாகன விற்பனை, 34.13 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஐச்சர் நிறுவனம் 6,257 வர்த்தக வாகனங்களும், வால்வோ நிறுவனம் 129 வாகனங்களும் விற்பனை செய்துள்ளன.