ADDED : நவ 18, 2024 01:16 AM

புதுடில்லி:தமிழ்நாட்டில் உள்ள தனது ஐபோன் ஆலைக்காக 'பெகட்ரான்' நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டாடா நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவானைச் சேர்ந்த பெகட்ரான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சென்னையில் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையின் பங்குகளை டாடாவிற்கு விற்க பேச்சு நடத்தி வருவதாகவும், அதன் பெரும்பான்மையான பங்குகளைவாங்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், டாடா வசம் 60 சதவீத பங்குகளை வைத்திருப்பதுடன், கூட்டு முயற்சியின் கீழ் அன்றாட செயல்பாடுகளை நடத்தும். அதேவேளையில், மீதமுள்ள பங்குகளுடன் பெகட்ரான் நிறுவனம் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என, தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள பெகட்ரானின் ஒரே ஐபோன் ஆலை டாடா வசமாக உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள தைவானின் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு ஆலையை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.