மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி
மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி
ADDED : ஜன 11, 2025 01:02 AM

புதுடில்லி,:புத்தாண்டில் முதலாவதாக, மாநில அரசுகளுக்கு 1.73 லட்சம் கோடி ரூபாயை வரிப் பகிர்வாக, மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு 7,057 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில், மாநிலங்களின் வரிப் பகிர்வாக 89,086 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியிருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக, மாநிலங்களுக்கு வரியை மத்திய அரசு பகிர்ந்தளித்து உள்ளது.
முதலீட்டு செலவினம் மற்றும் வளர்ச்சிக்கான நிதி, நலத்திட்டங்கள் தொடர்பான செலவுகளை இம்மாதம் மாநில அரசுகள் மேற்கொள்வதற்காக, கூடுதலாக வரி பகிர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை அரசியல் சட்டப்படி அமலில் இருக்கிறது. குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்துக்கு 31,049 கோடி ரூபாயும் குறைந்தபட்சமாக கோவாவுக்கு 667 கோடி ரூபாயும் வரிப் பகிர்வாக கிடைத்துள்ளது. தமிழகத்துக்கு 7,057 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

