ஆடம்பர கார்கள் இறக்குமதியில் 25 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
ஆடம்பர கார்கள் இறக்குமதியில் 25 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
ADDED : மே 15, 2025 01:27 AM

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர கார்களின் மதிப்பை குறைத்து, சுங்க வரியை செலுத்தாமல், இறக்குமதியாளர்கள் 25 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக ஆடம்பர கார்களின் உண்மையான விலையில் இருந்து 50 சதவீதம் அளவுக்கு, அதன் மதிப்பை குறைத்து காட்டி, சுங்க வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளது.
இது தொடர்பான விசாரணையில், 30க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் வாயிலாக ஹைதராபாத், மும்பை மற்றும் புனே, ஆமதாபாத், பெங்களூரு, டில்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், 25 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துஉள்ளனர்.
எட்டு ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து 7 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஹைதராபாதைச் சேர்ந்த முக்கிய இறக்குமதியாளரை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.