வரி சலுகை: கூடுதல் தொகையை சரியாக பயன்படுத்துவது எப்படி?
வரி சலுகை: கூடுதல் தொகையை சரியாக பயன்படுத்துவது எப்படி?
ADDED : பிப் 09, 2025 08:02 PM

வருமானத்திற்குள் செலவு செய்வது எப்படி முக்கியமானதோ, அதே போல கூடுதல் அல்லது உபரி வருமானத்தை சரியாக செலவு செய்வதும் முக்கியமானது. இது சவாலானதாகவும் அமையலாம். போனஸ் அல்லது எதிர்பாராமல் வரும் உபரி தொகையை விரும்பிய வகையிலே செலவு செய்வது ஏற்றது அல்ல.
இது போலவே தற்போது புதிய வருமான வரிவிதிப்பு முறையின் கீழ், 12 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் என அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலருக்கும் கூடுதல் வருமானம் கையில் கிடைக்கும்.இந்த தொகையை பயன்படுத்த முறையான திட்டமிடல் தேவை:
ஆடம்பர செலவுகள்:
திட்டமிடாமல் செயல்படும் போது கூடுதல் வருமானத்தை ஆடம்பரமாக செலவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. தேவையில்லாத மிகை செலவுகளையும் மேற்கொள்ளலாம். சேமிப்பு, முதலீடு போன்றவற்றுக்கு ஒதுக்கிய பிறகே கூடுதல் பணத்தை செலவிடுவது ஏற்றதாக இருக்கும்.
ஒரே முறை:
கூடுதல் வருமானம் வரும் உற்சாகத்தில் செலவு செய்ய முற்படும் போது, ஒரே முறையில் மொத்த தொகையை யும் செலவிடும் அபாயமும் இருக்கிறது. மேலும், பழைய முறையை போல வரிச்சலுகை சேமிப்பு முதலீடுகள் தேவையற்று போகலாம். ஆனால், இது நீண்ட கால பாதுகாப்பை பாதிக்கலாம்.
திட்டம் தேவை:
கூடுதல் வருமானத்தை செலவு செய்ய ஏற்ற திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். நிதி இலக்குகளுக்கான தொகை மற்றும் நுகர்வுக்கான தொகை என பிரித்துக் கொள்ளலாம். கடன் சுமை
உள்ளவர்கள் கடனை அடைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனிநபர் கடன் அல்லது கார்டு கடனை அடைக்க வேண்டும்.
நீண்ட கால இலக்குகள்:
ஓய்வு கால திட்டமிடல் மற்றும் பிள்ளைகள் கல்வி போன்றவற்றுக்கு கூடுதல் தொகையின் ஒரு பகுதியை ஒதுக்குவது நல்லது. நீண்ட கால நோக்கிலான முதலீட்டின்
பங்களிப்பை அதிகமாக்கலாம். வீட்டுக்கடன் இருந்தால், கடனுக்கான காலத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
வரி சேமிப்பு:
வரி சேமிப்பு பலனை கொண்ட ஒரு சில முதலீடுகளை தொடர்வது அவசியம். உதாரணமாக, பொது சேமநல நிதி பங்களிப்பை தொடர வேண்டும். இந்த திட்டம் முதிர்வு நிலையிலும் வரிச்சலுகை கொண்டிருக்கிறது. என்.பி.எஸ்., திட்டத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.