வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்த அமெரிக்கா செல்லும் குழு
வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்த அமெரிக்கா செல்லும் குழு
ADDED : அக் 13, 2025 11:02 PM

புதுடில்லி : அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு நடந்த மத்திய அரசின் மூத்த அதிகாரிகளை கொண்ட குழு, இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்பகுதியை நிறைவேற்ற இரு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதுவரை ஐந்து கட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆறாவது கட்ட பேச்சு நடத்த, இந்திய அதிகாரிகள்குழு அமெரிக்கா செல்லவிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக பேச்சு நடத்த கடந்த மாதம் தான் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று வந்தது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் உள்ளிட்ட அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பியுஷ் கோயல் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படிருந்தது. வர்த்தக விவாதங்களை தொடரவும், இரு தரப்புக்கும் சாதகமான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு இந்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறது. தற்போது வரை, அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.