ADDED : ஆக 29, 2025 10:59 AM
சென்னை: 'டெக்னோ எலக்ட்ரிக் அண்டு இன்ஜினியரிங்' நிறுவனத்தின், டிஜிட்டல் கட்டமைப்பு பிரிவான டெக்னோ டிஜிட்டல், சென்னையில் ஏ.ஐ., தரவு மையத்தை துவங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இதற்காக 1,535 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் 36 மெகாவாட், ஏ.ஐ., தயார்நிலை கொண்ட தரவு மையம் துவங்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் 8,700 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்ய இருப்பதாக, டெக்னோ டிஜிட்டல் அறிவித்துள்ள நிலையில், அதில் சென்னை தரவு மையத்துக்கான முதலீடும் அடங்கும்.
இரண்டு லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த தரவு மையம், 10 கிலோ வாட் முதல் 50 கிலோ வாட் வரை அல்லது அதற்கு மேல், தரவு அடுக்குகளுக்கு மின்சார அடர்த்தி வழங்க ஆதரவளிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயர் அடர்த்தி கொண்ட 2,400 தரவு அடுக்குகள் இடம்பெறும் வகையில், தரவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, டெக்னோ டிஜிட்டல் தெரிவித்து உள்ளது.

