UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 10:24 PM

“எல்லா தொழில்களிலும் தொழில்நுட்பத்துக்கான தேவை இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பம் இருந்தால் தான் அது ஒரு புத்தொழில் நிறுவனம் என்று கருத வேண்டியதில்லை,” என்கிறார், ஏ.பி.டி., குழுமத்தின் செயல் இயக்குநர் சங்கர் வானவராயர். ‘நீலகிரி பொருளாதார உரையாடல்’ கருத்தரங்கின் தலைவரான அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தமிழக துணிகர முதலீட்டுச் சந்தை மும்பை, பெங்களூரு போல முதிர்ச்சி அடைந்திருக்கிறதா?
மும்பையும், பெங்களூரும் முக்கிய நிதி மையங்களாக விளங்குகின்றன. அவற்றுக்கு ஊடக வெளிச்சமும் அதிகம். தமிழகத்தில் நீண்டகால முதலீட்டு கலாசா ரம் நிலவி வருகிறது. சென்னை, கொச்சி போன்ற நகரங்களும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் டாடாவின் ’ஜஸ்கோ’ போன்ற ஒரு நிறுவனம் இல்லையே?
டாடா நிறுவனம், சமூக சேவைக்காகவே ஜாம்ஷெட்பூரில் ‘ஜஸ்கோ’வை நடத்துகிறது. நம்மூரில் அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்றாலும், தனித்தனியாகச் சிறப்பாக சமூக சேவை செய்யும் பல நிறுவனங்கள் இருக்கின்றன.
‘ஸ்டார்ட்அப்’ அமைக்க தொழில்நுட்பம் கட்டாயமா?
ஸ்டார்ட்அப் என்றால் தொழில்நுட்பம், உற்பத்தி மட்டுமே அல்ல. சமுதாயத்தில் ஒரு வாய்ப்பையோ அல்லது தீர்வையோ தருவதுதான் ஸ்டார்ட்அப். தொழில்நுட்பம் இன்றியும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
நீலகிரி பொருளாதார உரையாடலின் நோக்கம் என்ன?
நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கியத் துாண். எனவே, அதனை மையக்கருத்தாக வைத்து ‘நீலகிரி பொருளாதார உரையாடல்’ பிப்ரவரி 2027-ல் நான்காவது ஆண்டாக நடத்தப்பட உள்ளது.
இதில் தொழில்நுட்பம், புவிசார் அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும். கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்படும்.
‘மேட் இன் கொங்கு மண்டலம்’ உருவாக வாய்ப்பிருக்கிறதா?
கோயம்புத்துாரும், விரிவான கொங்கு மண்டலமும் பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளில் அடையாளத்தை உருவாக்க முடியும்.
ஜெர்மனியின் ‘ஸ்டுட்கார்ட்’ நகரம் பொறியியல் தயாரிப்புகளுக்கும், புனே தொழில்துறைக்கும் பெயர் பெற்றுள்ளதைப் போல, கொங்கு மண்டலத்தையும் ஓர் அடையாளத்துடன் முன்னிறுத்தலாம். அதற்கு, எல்லா தயாரிப்புகளிலும் உலக தரநிலைகளை நாம் உறுதி செய்ய வேண்டும்.
