தற்காலிக வரிச்சலுகை எதிரொலி: ரூ.7,935 கோடிக்கு பஞ்சு இறக்குமதி
தற்காலிக வரிச்சலுகை எதிரொலி: ரூ.7,935 கோடிக்கு பஞ்சு இறக்குமதி
ADDED : நவ 20, 2025 12:02 AM

திருப்பூர்:இறக்குமதி வரியில் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டதால், கடந்த ஏழு மாதங்களில், 7,935 கோடி ரூபாய்க்கு பஞ்சு இறக்குமதி நடந்துள்ளது.
நம் நாட்டில், கடந்த பருத்தி சீசனில் விளைச்சல் குறைவு என்பதால், பருத்தி இறக்குமதி வரியை 11 சதவீதமாக குறைத்து, டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதனால், பஞ்சு இறக்குமதி திடீரென அதிகரித்தது.
கடந்த பருத்தி ஆண்டின் (2024 அக்., - 2025 செப்.,) பஞ்சு இறக்குமதி, 41 லட்சம் 'பேல்'களாக அதிகரித்தது. கடந்த ஏப்., முதல் அக்., மாதம் வரையிலான, ஏழு மாதங்களில் பஞ்சு, 7,935 கோடி ரூபாய்க்கு இறக்குமதியாகி உள்ளது.
இது, கடந்த ஆண்டை காட்டிலும், 56 சதவீதம் அதிகம். குறிப்பாக, கடந்த அக்., மாதம் மட்டும், 2,069 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு இறக்குமதிஆகியுள்ளது.
முந்தைய ஆண்டு அக்., மாதத்துடன் ஒப்பிடுகையில், இது, 93 சதவீதம் அதிகம். சர்வதேச பஞ்சு விலை, இந்திய பஞ்சு விலையை காட்டிலும் குறைவாக இருந்ததால், இறக்குமதி அதிகரித்தது. தற்போது, இந்தியாவில் நிலவும் பஞ்சு விலையும், இறக்குமதி பஞ்சின் விலைக்கு இணையாக இருப்பதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து 'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ்' கூட்டமைப்பின் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறுகையில், “குஜராத் உட்பட, நாடு முழுதும் உள்ள நுாற்பாலைகள், அதிக அளவு பஞ்சு இறக்குமதி செய்துள்ளன.
வழக்கமான பருத்தி மகசூல் மற்றும் பஞ்சு இறக்குமதியால், ஜவுளி தொழிலுக்கான மூலப்பொருள் தடையின்றி கிடைக்கும். பருத்தியும், அதன் துணை பொருட்களும், செயற்கை பஞ்சுடன் போட்டியிட, இறக்குமதி பருத்தி உதவியாக இருக்கும்” என்றார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பருத்திக்கு, நிரந்தரமாக வரியில் இருந்து விலக்கும், அதை கொண்டு உற்பத்தியாகும் ஆடைகள் ஏற்றுமதிக்கு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படலாம்.

