நந்தம்பாக்கம் 'பின்டெக் சிட்டியில்' 5 நட்சத்திர ஹோட்டல் கட்ட 'டெண்டர்'
நந்தம்பாக்கம் 'பின்டெக் சிட்டியில்' 5 நட்சத்திர ஹோட்டல் கட்ட 'டெண்டர்'
ADDED : அக் 26, 2025 01:22 AM

சென்னை: சென்னை நந்தம்பாக்கம், 'பின்டெக் சிட்டியில்' ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்காக, 2.38 ஏக்கரை குத்தகைக்கு வழங்க தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. ஏக்கருக்கு, 65 கோடி ரூபாய்க்கு மேல் விலை வழங்கும் நிறுவனத்திற்கு மனை ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் சர்வதேச நிதி மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' அதாவது நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைத்து வருகிறது.
முதல் கட்டமாக, 56 ஏக்கர் தொழில் மனை மேம்படுத்தப்பட்டு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. பின்டெக் சிட்டியில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட உள்ளது.
இதை, விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் அமைக்கலாம். இதற்காக, 2.38 ஏக்கரை குத்தகைக்கு விட, டிட்கோ டெண்டர் கோரியுள்ளது. ஏக்கருக்கு, 65 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதைவிட அதிக விலை கோரும் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

