ADDED : செப் 29, 2024 01:46 AM

சென்னை:திருவண்ணாமலை மற்றும் கரூரில், தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்பை உருவாக்க, 'மினி டைடல் பார்க்' கட்டுவதற்கான கட்டட வடிவமைப்பாளர் தேர்வு பணியை, 'டைடல் பார்க்' நிறுவனம் துவக்கிஉள்ளது.
அரசு, உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முக்கிய நகரங்களில், 50,000 முதல், ஒரு லட்சம் சதுர அடியில், 'மினி டைடல் பார்க்' கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களில் தலா, 55,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொழில் துறை அமைச்சர் ராஜா, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
தற்போது, திருவண்ணாமலை நகரத்திலும், கரூரிலும் மினி டைடல் பார்க் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட உள்ள டைடல் பார்க் கட்டடத்திற்கு வடிவமைப்பை உருவாக்கி தரும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டைடல் பார்க் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
மினி டைடல் பார்க்கில் உள்ள அலுவலகங்களை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., எனப்படும் வணிக செயலாக்க நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இதனால் இரு மாவட்டங்களிலும் தலா, 500 வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படும்.