எண்ணுார் அனல் மின் திட்டம்; தனியார் செயல்படுத்த டெண்டர்
எண்ணுார் அனல் மின் திட்டம்; தனியார் செயல்படுத்த டெண்டர்
UPDATED : ஜன 11, 2026 09:13 AM
ADDED : ஜன 11, 2026 01:14 AM

சென்னை: சென்னை அடுத்த எர்ணாவூரில், கட்டுமான பணி முடங்கியுள்ள மின் வாரியத்தின் எண்ணுார் விரிவாக்க அனல் மின் திட்டத்தை, தனியார் நிறுவனமே சொந்த செலவில் அமைத்து, இயக்கும் வகையில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த எர்ணாவூரில், 660 மெகா வாட் திறனில் எண்ணுார் விரிவாக்க அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2014ல் மின் வாரியம் துவக்கியது. இதன் கட்டுமான பணிகளை, 'லேண்கோ' என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதன் திட்ட செ லவு, 3,921 கோடி ரூபாய்.
ஒப்பந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 18 சதவீத பணிகளுடன், 2018 முதல் கட்டுமானம் முடங்கியது. மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள, பி.ஜி.ஆர்., என்ற தனியார் நிறுவனத்துக்கு, 2022ல் ஆணை வழங்கப்பட்டது.
திட்ட செலவு, 4,442 கோடி ரூபாய். அந்நிறுவனம் ஓராண்டுக்குள் பணிகளை துவக்காததால், ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ள எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை, தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் என்ற அடிப்படையில், ஒப்பந்த நிறுவனமே தன் செலவில் அமைத்து, நடத்தும் வகையில் செயல்படுத்த , அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, தகுதியான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்களில், எந்த நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்க முன் வருகிறதோ, அந்த நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்பட உள்ளது. ஆணை வழங்கப்பட்டதில் இருந்து, 48 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளைமுடித்துவிட வேண்டும். இல்லையெனில் அபராதம் வசூல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
எட்டு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் முடங்கி உள்ள எண்ணூர் விரிவாக்க மின் திட்டத்தை, தனியார் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

