'இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்தால் உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்காது'
'இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்தால் உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்காது'
ADDED : மார் 17, 2024 01:40 AM

புதுடில்லி:'டெஸ்லா' நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தால், அது உள்நாட்டு வாகன தயாரிப்பாளர்களை பெரிதும் பாதிக்காது, என 'மாருதி சுசூகி' நிறுவன தலைவர், ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, மத்திய அரசு, புதிய மின்வாகன கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி, குறைந்தபட்சம் 4,150 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு வசதிகளை மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கும் பட்சத்தில், தங்கள் மின்சார வாகனங்களை குறைந்த இறக்குமதி வரியில், இறக்குமதி செய்யலாம்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு, அவற்றின் மதிப்பை பொருத்து, 70 முதல் 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் புதிய கொள்கையின்படி, 15 சதவீதத்தில் இறக்குமதி செய்யலாம்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், தன் டெஸ்லா நிறுவனத்தை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலையில், இந்தியாவில் தொழிற்சாலை துவக்க விருப்பம் தெரிவித்த அவர், மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு அவர் கோரிக்கையை நிராகரித்ததால், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைய முடியாமால் போனது.
இந்த நிலையில், புதிய மின்வாகன கொள்கை, டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில், நுழைவதற்கு சாதகமாக அமைந்துள்ளது. டெஸ்லாவின் வருகை, உள்நாட்டு வாகன தயாரிப்பாளர்களை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அது பாதிக்காது என, மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்காக, புதிய மின்வாகன கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை, உயர் விலை கார்கள் மற்றும் ஆடம்பர வாகனங்களுக்கானது. எனவே, இது உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், குறைவாகவே இருக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

