
யு.பி.ஐ., ஊக்குவிப்பு
தெருவோரக் கடைகள் உள்ளிட்ட சிறுவணிகர்கள், சிறிய தொகையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 1,500 கோடி ரூபாயில் ஊக்கத்தொகை வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் டிரம்ப் நிறுவனம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய கட்டுமான கூட்டு நிறுவனமான டிரிபிகா டெவலப்பர்ஸ், புனேவில் முதலாவது வர்த்தக கட்டுமான திட்டத்தை துவங்குகிறது. குந்தன் ஸ்பேசஸ் நிறுவனத்துடன் இணைந்து, 16 லட்சம் சதுர அடியில், 1,700 கோடி ரூபாயில், 'தி டிரம்ப் வேர்ல்டு சென்டர்' கட்டப்படஉள்ளது.
கடல் வழித்தட கட்டமைப்பு
பசுமை எரிசக்தி கடல் வழித்தடத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை, இந்தியாவும் சிங்கப்பூரும் ஆராய ஒப்புக் கொண்டுள்ளன. பசுமை ஹைட்ரஜன், அமோனியா ஆகியவற்றை கப்பலில் இந்தியா கொண்டு வருவது பற்றி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசி வருகிறார். ஆண்டுக்கு 5.50 கோடி டன் பசுமை எரிசக்தியை, கப்பலில் எடுத்துச் செல்லும் கட்டமைப்பை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
பாதுகாப்பு துறை பங்குகள்
இந்திய பங்குச் சந்தைகளில், ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், நேற்று கணிசமான விலை உயர்வு கண்டன. குறிப்பாக, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனப் பங்கு விலை 20 சதவீதம் உயர்ந்தது.
'கொச்சின் ஷிப்யார்டு, பாராஸ் டிபன்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' பங்குகளும் 5 முதல் 10 சதவீத விலை உயர்வு கண்டன.