தேர்தல் கெடுபிடியால் தவிக்கும் ஜவுளி சந்தை வியாபாரிகள்
தேர்தல் கெடுபிடியால் தவிக்கும் ஜவுளி சந்தை வியாபாரிகள்
ADDED : மார் 19, 2024 10:40 PM

ஈரோடு:ஈரோடு ஜவுளி சந்தைக்கு, தேர்தலால் வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாகி உள்ளது.
ஈரோடில் கனி மார்க்கெட் ஜவுளி வாரச்சந்தை விற்பனை நேற்று நடந்தது. தேர்தல் கெடுபிடியால் ஜவுளி வாங்க வியாபாரிகள், கடைக்காரர்கள் வரவில்லை. இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், 50,000 ரூபாய்க்கு மேல் பணமாக கொண்டு வர முடியாமலும், மொத்தமாக ஜவுளியை வாங்கி செல்ல முடியாமலும் உள்ளது. கடந்த மூன்று நாளில், மூன்று ஜவுளி வியாபாரிகள், மற்றும் திருமணத்துக்காக ஜவுளி வாங்கி சென்ற ஒருவர் என நால்வர் இப்பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறையால், வெளி மாவட்டம், வெளிமாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் வரவில்லை. இதனால், 20 சதவீத விற்பனை கூட ஆகவில்லை.  ஜவுளி, பனியன், நைட்டி, புடவை, வேட்டி போன்றவற்றை மொத்தமாக வாங்கி செல்பவர்களை பிடித்து, பொருட்களை பறிமுதல் செய்தால், வியாபாரம் என்னவாகும் என தேர்தல் அதிகாரிகள் சிந்திப்பதில்லை. இதுபற்றி ஓரிரு நாட்களில் வியாபாரிகள், பிற சங்கங்களிடம் பேசி, முறையான ஜி.எஸ்.டி., பில், கடைகளுக்கான 'பில்' இருந்தால், அவர்களை அனுமதிக்க கலெக்டரிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

