ADDED : ஜன 03, 2025 12:51 AM

சென்னை:'தாட்கோ' எனப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், 142 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வியாபாரிகளுக்கு, 4 சதவீத வட்டியில், 4 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, தாட்கோ சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வியாபாரிகளை ஊக்கப்படுத்த, 'சிறு வணிக கடன் திட்டம்' கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் மானியத்துடன், 4 சதவீதம் வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது.
தாட்கோவால் உருவாக்கப்பட்ட சங்கத்தில், உறுப்பினராக உள்ளவர்கள், கடன் பெற தகுதியானவர்கள். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். முதற்கட்டமாக, சென்னையில் 46 வியாபாரிகளுக்கு, 57.50 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 142 வியாபாரிகளுக்கு, 4 கோடி ரூபாய் கடன் வழங்க தாட்கோ முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.