வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை தொடரும்
வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை தொடரும்
ADDED : பிப் 21, 2024 12:55 AM

புதுடில்லி:வெங்காய ஏற்றுமதிக்கான தடை, ஏற்கனவே அறிவித்துள்ளபடி, வருகிற மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் 8ம் தேதியன்று, மத்திய அரசு, மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சமீபத்தில், மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கோனில், கடந்த 17ம் தேதி 1 குவிண்டால் 1,280 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், நேற்று முன்தினம் 40.62 சதவீதம் உயர்ந்து 1,800 ரூபாயாக உயர்ந்தது.
இந்நிலையில், விலை உயர்வு குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித்குமார் சிங் கூறியதாவது:
வெங்காயம் ஏற்றுமதி மீதான தடை நீக்கப்படவில்லை; அது அமலில் உள்ளது. அரசின் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை.
நுகர்வோருக்கு வெங்காயம் நியாயமான விலையில், போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது ராபி எனப்படும் குளிர்கால வெங்காய உற்பத்தி, குறிப்பாக மஹாராஷ்டிராவில் குறைவாக இருப்பதால், நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக, வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

