சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சி; மத்திய அரசு கைவிட்டது
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சி; மத்திய அரசு கைவிட்டது
ADDED : ஜன 04, 2024 12:33 AM

புதுடில்லி: இந்திய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான 'சேலம் உருக்காலை'யை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம் உருக்காலையின் பங்கு விற்பனைக்கு, கடந்த 2019 ஜூலை 4ம் தேதி அழைப்புகள் விடப்பட்டன.
பல நிறுவனங்களின் விருப்பங்கள் பெறப்பட்டு, ஏலதாரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், இதற்கான பரிவர்த்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்கள் ஆர்வம் காட்டாததால், தனியார்மயமாக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மைத் துறை, அதன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இந்திய உருக்கு ஆணையத்தின் கீழ் உள்ள மூன்று ஆலைகளை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏலதாரர்களின் விருப்பமின்மையால், ஏற்கனவே இரண்டு ஆலைகளை தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.