நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத சரிவு
ADDED : மே 31, 2025 12:49 AM

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில் 6.50 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு துறை வளர்ச்சி கடுமையாக சரிந்ததே, வளர்ச்சி குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த நிதியாண்டு மற்றும் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில், ஒட்டுமொத்த நிதியாண்டின் வளர்ச்சி 6.50 சதவீதம் எனவும்; மார்ச் காலாண்டு வளர்ச்சி 7.40 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 - 24ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 8.40 சதவீதமாக இருந்தது.
இலக்கு எட்டப்பட்டது
மத்திய அரசு கடந்த நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கை எட்டிவிட்டதாக, சி.ஜி.ஏ., எனும் முதன்மை கணக்கியல் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதாரத்தில் 4.80 சதவீதம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த நிதியாண்டில் அரசின் வருவாய் 30.36 லட்சம் கோடி ரூபாயாகவும்; செலவினம் 46.55 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.