ADDED : பிப் 18, 2025 11:56 PM

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி மதிப்பு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ஜனவரியிலும் சரிந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 2.38 சதவீதம் குறைந்து, 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இறக்குமதி 10.28 சதவீதம் உயர்ந்து, 5.17 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வளர்ச்சி
ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த மாதம் 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 1.91 லட்சம் கோடி ரூபாயாகவும்; கடந்தாண்டு ஜனவரியில் 1.44 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
கடந்த மாதம் பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஏற்றுமதி கணிசமாக சரிந்துள்ளது. ஜவுளி, மின்னணுவியல், பொறியியல், அரிசி மற்றும் கடல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இவை தவிர, கடந்தாண்டு ஜனவரியில் 16,500 கோடி ரூபாயாக இருந்த தங்க இறக்குமதி, நடப்பாண்டு ஜனவரியில் 23,300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி 1.39 சதவீதமும்; இறக்குமதி 7.43 சதவீதமும் வளர்ச்சி கண்டுஉள்ளன.
கடந்த மாதம் நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 3.35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 1.59 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் துறை வர்த்தகம் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.
இதனிடையே, உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி சிறப்பாகவே உள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளார்.
கணிசமாக அதிகரிப்பு
கடந்த மாதம் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்து, 73,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி 33.46 சதவீதம் அதிகரித்து 31,000 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 8.95 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா வர்த்தக உபரி கொண்டுள்ள ஒரு சில நாடுகளில், அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030ம் ஆண்டுக்குள், இரு தரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது கிட்டத்தட்ட 43.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.