ADDED : ஜன 16, 2025 12:09 AM

புதுடில்லி : நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதம் 1 சதவீதம் குறைந்து 3.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இறக்குமதி 4.90 சதவீதம் அதிகரித்து, 5.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம், அதாவது வர்த்தக பற்றாக்குறை 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
முன்னதாக, நடப்பாண்டில் உலக சரக்கு வர்த்தக வளர்ச்சி குறித்த தன் கணிப்பை, உலக வர்த்தக அமைப்பு முன்பிருந்த 3.30 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிச்சயமற்ற கொள்கை முடிவுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அமைப்பு தன் கணிப்பை குறைத்தது. மேலும், மேற்காசிய நாடுகளில் மோதல்கள் தீவிரமடையும்பட்சத்தில் அதன் தாக்கம் பிற நாடுகள், பிராந்தியங்களிலும் உணரப்படும் என தெரிவித்திருந்தது.
அது மட்டுமல்லாமல், இது கடல் சார் போக்குவரத்தை பாதித்து, எரிபொருள் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும்; இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.