உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு
உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு
ADDED : ஜன 17, 2024 11:32 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் அக்டோபர் வரையான காலத்தில், உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், அரசு எட்டு துறைகளுக்கு, 4,415 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு, ஜவுளி, மருத்துவ சாதனங்கள், வாகனங்கள், உணவுப் பொருட்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட 14 துறைகளுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டங்களை, 1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில் அரசு, கடந்த 2021ம் ஆண்டில் அறிவித்தது.
இந்தத் திட்டங்கள், முக்கிய துறைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. மேலும், இந்திய நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டித்தன்மையுடன் வைத்து இருப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 - 23 நிதியாண்டில், மொத்தம் 2,900 கோடி ரூபாய் அரசு வழங்கி இருந்தது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில், அக்டோபர் வரையான காலத்தில், 4,400 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.