தீவிரம் அடையும் உலக வர்த்தக போர் மாறி மாறி வரி விதிக்கும் அமெரிக்கா - சீனா சீனாவுக்கு 104%; அமெரிக்காவுக்கு 84%
தீவிரம் அடையும் உலக வர்த்தக போர் மாறி மாறி வரி விதிக்கும் அமெரிக்கா - சீனா சீனாவுக்கு 104%; அமெரிக்காவுக்கு 84%
ADDED : ஏப் 09, 2025 11:48 PM

வாஷிங்டன்:ஏட்டிக்கு போட்டியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதித்த சீனாவுக்கு பதிலடியாக, அதன் பொருட்கள் மீதான வரியை 104 சதவீதமாக அதிகரித்து அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலான நேற்றைய தினமே, சீனாவுக்கான 104 சதவீத வரி அமலாகும் என வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்த அதிர்வலை அடங்குவதற்குள்ளாக, சீனா வரியை 84 சதவீதமாக உயர்த்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் சீனப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்படும் வர்த்தக சமநிலையற்ற சூழலை சமாளிக்கவும்; உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும்; வரி விதிப்பில் சமநிலையை பராமரிக்கவும், சீனாவுக்கு கூடுதல் வரி விதிப்பு அவசியமாவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முந்தைய வரி விதிப்பு பட்டியலில், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, பதிலடியாக சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் ஏற்கனவே உள்ள வரியுடன், 34 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தது.
சீனாவின் இந்த அதிரடியை எதிர்பாராத டிரம்ப், 9ம் தேதிக்குள் சீனா இதை வாபஸ் பெறாவிட்டால், 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பேன் என அறிவித்தார்.
ஆனால், சீனா தன் முடிவை வாபஸ் பெறாத நிலையில், ஏற்கனவே உள்ள வரிகளை சேர்த்து, சீனப் பொருட்களுக்கு மொத்தம் 104 சதவீத வரி விதித்து, வர்த்தகப் போருக்கு தயார் என அறிவித்துள்ளார்.
வரி தொடர்பாக, அமெரிக்கா - சீனா இடையே நடைபெறும் அனைத்து பேச்சுகளையும் முறித்துக் கொள்வதாகவும் அறிவித்த டிரம்ப், மற்ற நாடுகளுடன் பேச்சில் அமெரிக்கா கவனம் செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வரி விதிப்பு போர் முடிவுக்கு வருவது தென்படாத நிலையில், அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.
இதனால், சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு மொத்த வரி 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இன்று முதலே அமலுக்கு வரும் என சீன அரசு அறிவித்துள்ளது.
104% ஆனது எப்படி?
பிப்., : 10%
மார்ச்: 10%
ஏப்., 2: 34%
ஏப்., 8: 50%
மொத்தம்: 104%