பிரதமருடன் சந்திப்பு பெரும் நம்பிக்கையை தந்தது! கோவை தொழில் அமைப்பினர் மகிழ்ச்சி
பிரதமருடன் சந்திப்பு பெரும் நம்பிக்கையை தந்தது! கோவை தொழில் அமைப்பினர் மகிழ்ச்சி
ADDED : மார் 19, 2024 10:35 PM

கோவையில் தன்னைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திய தொழில் துறையினரிடம், தேர்தலுக்குப் பின், அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானபின், முதல்முறையாக நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த, 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். கோவை சர்க்யூட் ஹவுசில் அன்றிரவு தங்கிய அவர், கோவை தொழில்துறையினர் சிலரை நேரில் சந்தித்து பேசினார்.
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பண்ணாரி குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரமணி ஆகிய மூவரும் பிரதமரை சந்தித்துப் பேசினர்.
குஜராத் மாடலை விளக்கிய மோடி
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:
கோவையில் நொய்யல் மீட்புக்காக, 'சிறுதுளி' மேற்கொண்ட பணிகளை விளக்கினோம். நொய்யல் சீரமைப்பு, கழிவுநீர் கலப்பது, கோவையின் தண்ணீர் பிரச்னை குறித்து நாங்கள் விளக்கியதும், 'ஜல்சக்தி' என்று உற்சாகமாகப் பேசினார். அவர், குஜராத்தில் தான் முதல்வராக இருந்தபோது, அப்போதிருந்த தண்ணீர்ப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காணப்பட்டது என்பதை விரிவாக விளக்கினார்.
'குஜராத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்தது; ஒரு பகுதி பாலைவனமாக இருந்தது; அதற்குத் தீர்வு காண, நுாறு நாட்களில் ஒரு லட்சம் குட்டைகளை வெட்டினோம்; இப்போது தண்ணீர் தேவையில் அம்மாநிலம் தன்னிறைவு அடைந்துள்ளது' என்று தெரிவித்தார். நொய்யல் சீரமைப்புக்கு உதவ வேண்டும்; நொய்யலில் கழிவுநீர் கலப்பது குறித்து, ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். கோவையில் மட்டுமின்றி, தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் கழிவுநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண, புதிய தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து, அதற்கு மத்திய அரசே நிதி ஒதுக்க வேண்டும்.
மரங்கள் வளர்ப்பதற்கு நிறைய இடங்கள் தேவைப்படுவதால், மத்திய அரசின் இடங்களை ஒதுக்க வலியுறுத்தினோம். குறிப்பாக, ரயில்வேக்கு ஏராளமான இடம் இருக்கிறது; வெளிநாடுகளில் இருப்பது போல, ரயில் தடங்களின் இரு புறமும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கால் மணி நேரம் எங்களுடன் செலவிட்ட அவர், எல்லாவற்றுக்கும், 'பாசிட்டிவ்' ஆகவே பதிலளித்தார்.
இவ்வாறு வனிதா மோகன் தெரிவித்தார்.
பெரும் நம்பிக்கை
பிரதமர் மோடியைச் சந்தித்த தொழில்துறையினர் கூறுகையில், 'எல்லாவற்றுக்கும் ஒரு பதில் வைத்திருந்த அவர், அனைத்துக்கும் தான் செய்த சாதனையை பற்றி ஓர் உதாரணத்தையும் சொல்லி, எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்த சந்திப்பு, பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

