ADDED : ஜன 11, 2025 01:11 AM

6.60 சதவீதம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து 'உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2025' என்ற தலைப்பில் ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ள கணிப்பு இது. கடந்த 2024ல் 6.90 சதவீதமாக மதிப்பிடப்பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி, 2025ல் 6.60 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐ.நா., அறிக்கை கூறுகிறது. இதில் பெரும்பாலும் தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் பெரும் பங்கு வகிக்கும் என்றும் சேவைகள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் ஐ.நா., கூறியுள்ளது.
3,00,00,000 டன்
வருகிற 2025 - 26 ராபி பருவத்திற்கான கோதுமை கொள்முதல் குறித்த அரசின் இலக்கு இது. நடப்பு 2024 - 25ம் ஆண்டில் அரசின் கோதுமை கொள்முதல் 3 முதல் 3.2 கோடி டன் இலக்கில் இருந்து, 2.66 கோடி டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 2.62 கோடி டன்னை தாண்டியுள்ளது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் 2025 - 26 ராபி பருவத்துக்கான சந்தைப்படுத்துதல் பருவத்திற்கு, 3 கோடி டன் கோதுமை கொள்முதலை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு பயிர் ஆண்டான 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில், 115 மில்லியன் டன் கோதுமை உற்பத்திக்கு அரசு இலக்கு வைத்திருந்தது.

