ADDED : ஜன 11, 2025 10:05 PM

643 கோடி ரூபாய்
தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் 2024ம் ஆண்டில் பெற்ற ஊதியம் இது. 2023ல் அவர் 544 கோடி ரூபாய் பெற்ற நிலையில், கடந்த ஆண்டில் அவரது ஊதியம் 18 சதவீதம் அதிகரித்தது. அடிப்படை சம்பளமாக 25.50 கோடி ரூபாய் பெற்ற டிம் குக், கிட்டத்தட்ட 490 ரூபாய்க்கு ஆப்பிள் நிறுவன பங்குகளாகவும் கூடுதல் படிகளாக கிட்டத்தட்ட 128 கோடி ரூபாயும் பெற்றிருந்ததாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
1,000 மெ.வா.
அசாமில், அந்த மாநில மின்சார வினியோக நிறுவனத்துடன் கூட்டு வணிகத்தில் சேர்ந்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான எல்.ஐ.சி., உற்பத்தி செய்யவுள்ள சூரியமின் உற்பத்தி அளவு இது. என்.எல்.சி., இந்தியா ரினீவபிள்ஸ் நிறுவனமும் அசாம் பவர் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனமும் இதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளன. இதன்படி, புதிய கூட்டு நிறுவனத்தில் என்.எல்.சி.,க்கு 51 சதவீதமும் அசாம் நிறுவனத்துக்கு 49 சதவீதமும் பங்குகள் இருக்கும். அசாமில் அதிகரித்து வரும் மின்சார தேவையை நிறைவு செய்யும் நடவடிக்கை யாக இந்த கூட்டு வணிக ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
72%
கடந்த ஆண்டில், மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்ததாக, சென்னையில் உள்ள மலேசிய துாதரக அதிகாரி சரவண குமார் குமாரவாசகம் தெரிவித்துள்ளார். இந்தியா, மலேசியா இடையே விமான சேவைகள் அதிகரிப்பும் இதற்குக் காரணம் என்றார் அவர். டிசம்பர் 2026 வரை, இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா நீட்டிப்பு வசதியை மலேசியா அளித்திருப்பதும், இருநாடுகள் இடையே போக்குவரத்தை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மலேசியாவின் கலாசாரம், அழகிய கடற்கரைகள், பரபரப்பான நகரங்களை கண்டு ரசிக்க தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் இது பொன்னான வாய்ப்பு என்றும் மலேசிய துாதரக அதிகாரி கூறினார்.

