ADDED : மே 02, 2025 12:24 AM

20,000
புதியவர்களை இந்தாண்டுக்குள் பணியமர்த்த, அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ்' திட்டமிட்டு உள்ளது. புதியவர்கள் நிறுவனத்தில் இணைவதால், அடுத்த இரண்டு காலாண்டுகளில் பணியாளர்கள் பயன்பாடு குறையும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்தமுள்ள 3,36,300 பணியாளர்களில், 85 சதவீதம் பேர், இந்தியாவில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
85,000
கோடி ரூபாய் முதலீட்டில், மஹாராஷ்டிராவில் சிப் ஆலை அமைப்பது தொடர்பாக, இஸ்ரேலின் டவர் நிறுவனத்துடன் நடத்தி வந்த ஆலோசனையை, அதானி குழுமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிப் தேவை, அதன் வர்த்தகம் தொடர்பான சரியான விபரங்கள் கிடைக்காததாலும், டவர் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் அதானி குழுமத்துக்கு திருப்தியில்லை என்பதாலும், இத்திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
25
கோடி ரூபாய் வரி செலுத்துமாறு, பிரிட்டானியா நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2023 மார்ச் மாதம் வரை ஜி.எஸ்.டி., குறைவாக செலுத்தியிருந்ததை ஆய்வில் தெரிய வந்ததாக, கோல்கட்டா வடக்கு பகுதி சி.ஜி.எஸ்.டி., கூடுதல் ஆணையர், ஜி.எஸ்.டி., ஆணையத்தில் பதிவு செய்தார். இதையடுத்து, பிரிட்டானியா நிறுவனத்திடம் ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவு விளக்கம் கேட்டுள்ளது.

