ADDED : ஜூலை 26, 2025 11:36 PM

ஆர்.பி.ஐ., இயக்குநராக அனுராதா தாகூர் நியமனம்
ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநராக, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அனுராதா தாகூர் நியமிக்கப்பட்டு உள்ளார். அஜய் சேத்துக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா, கடந்த 24ம் தேதி முதல் புதிய பொறுப்பை ஏற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பணக்கொள்கையை தீர்மானிக்கும் 21 உறுப்பினர்கள் கொண்ட மத்திய இயக்குநர்கள் குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செயல்பட்டு வருகிறார்.
நயாரா எனர்ஜி சி.இ.ஓ.,வாக செர்ஜி டெனிசோவ் நியமனம்
நயாரா எனர்ஜி நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக செர்ஜி டெனிசோவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன், உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யாவின் ரோஷ்நெப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நயாரா எனர்ஜி நிறுவனத்துக்கு பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்ஸாண்ட்ரோ டெஸ் டோரைட்ஸ் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
ரூ.1,020 கோடி திரட்ட ஐ.பி.ஓ., வரும் அமாஜி
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, கிளவுடு அடிப்படையிலான வீடியோ ஒளிபரப்பு மற்றும் பகிர்வு சேவைகளை அளித்து வரும் அமாஜி மீடியா லேப்ஸ், 1,020 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 353 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 667 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதனை கிளவுடு கட்டமைப்பை மேம்படுத்த முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.பி.ஓ., வருகிறது நெப்ரோபிளஸ்
ஹைதராபாதை சேர்ந்த நெப்ரோபிளஸ் பெயரில், டயாலிசிஸ் மருத்துவ சேவையை அளித்து வரும் நெப்ரோகேர் ஹெல்த் சர்வீசஸ், புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர் வசமுள்ள 1.27 கோடி பங்குகளுடன், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 353 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதனை 129 கோடி ரூபாயை புதிய கிளினிக் அமைக்கவும், 136 கோடி ரூபாயை கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளது.