ADDED : ஆக 20, 2025 12:32 AM

39
தமிழகத்தில், 39.42 கோடி ரூபாய் மதிப்பிலான ஹீலியம் மீட்பு செயல்முறை ஆலையை அமைக்க, ஓ.என்.ஜி.சி., மற்றும் 'இன்ஜினியர்ஸ் இந்தியா' நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆலை, தஞ்சாவூர் அருகே உள்ள குத்தாலம் ஓ.என்.ஜி.சி., எரிவாயு சேகரிப்பு மையத்தில் 18 மாதங்களில் அமைக்கப்பட உள்ளது.
5,000
மும்பை, டில்லி என்.சி.ஆர்., பெங்களூரு உள்பட முன்னணி மெட்ரோ நகரங்களில் ஆடம்பர வீடுகளுக்கான கட்டுமான செலவு, சதுர அடிக்கு 5,000 ரூபாயை தொட்டுள்ளது. கட்டுமான ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்ட தரவுகளில் இது தெரியவந்தது. குறைந்த விலை வீடுகளுக்கான சராசரி செலவு, சதுரடிக்கு 1,500 - 2,000 ரூபாயாகவும், நடுத்தர வீடுகளுக்கான செலவு, சதுரடிக்கு 2,000 - 2,800 ரூபாயாகவும் உள்ளது.
10
வரும் 2030ம் ஆண்டுக்குள், உலகளாவிய சந்தையில், 10 சதவீதம் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளதாக, மத்திய அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்து உள்ளார். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் முயற்சியாக, 19 நிறுவனங்களுக்கு 8.62 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.