ADDED : ஆக 29, 2025 10:54 AM
90,572
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, அதானி குழுமத்தின் வரி மற்றும் வட்டிக்கு முந்தைய லாபம் 90,572 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை குழுமத்தின் அதிகபட்ச 'வரிக்கு முந்தைய லாபம்' இது தான்.
உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி மற்றும் விமான நிலைய வணிகங்களின் சிறப்பான செயல்பாடுகளே இதற்கு காரணம் என, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
7,027
இண்டிகோ விமான நிறுவனத்தின் நிறுவனர் ராகேஷ் கங்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை, இண்டிகோவில் உள்ள தங்களது பங்குகளில் 3.10 சதவீதத்தை, 7,027 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனால், நிறுவனத்தில் இவர்களது பங்கு, 4.71 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், நேற்றைய வர்த்தகத்தில் இண்டிகோ பங்கு விலை 5.22 சதவீதம் சரிந்தது.
7,150
சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மார் நிறுவனம், அதானி குழுமத்தின் 'ஏ.டபிள்யு.எல்., அக்ரி பிசினஸ்' நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வாங்க அனுமதி கேட்டு, இந்திய போட்டி ஆணையத்திடம் விண்ணப்பித்துள் ளது.
ஏ.டபிள்யு.எல்., நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, வில்மார் நிறுவனத்துக்கு 7,150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக, அதானி குழுமம் கடந்த மாதம் அறிவித்தது. அனுமதி கிடைத்தால், ஏ.டபிள்யு.எல்., நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக, வில்மார் உருவெடுக்கும்.
586
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டத்தில், 586 கோடி ரூபாய் முதலீட்டில், அலுமினியம் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அலுமினியம், ஆப்பிள் ஐபோன்களின் வெளிப்புற மெட்டல் பாடி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

