ADDED : ஜன 15, 2025 09:10 AM

புதுடில்லி; அடுத்த ஐந்து ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தியை 20 லட்சம் டன்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய மஞ்சள் வாரியத்தை அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மஞ்சள் ஏற்றுமதியை சர்வதேச அளவில் அதிகரிப்பதில் தேசிய மஞ்சள் வாரியம் கவனம் செலுத்தும்.
தற்போது மஞ்சளின் ஆண்டு உற்பத்தி 10 லட்சம் டன்னாக உள்ள நிலையில், அதை இருமடங்காக அதிகரிக்க வாரியம் உதவும். மேலும், மஞ்சளில் மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரிப்பதிலும், நாட்டின் பாரம்பரிய வழிகளை வாரியம் ஊக்குவிக்கும்.
தங்க மசாலா என்றழைக்கப்படும் மஞ்சள் உற்பத்தியில், உலக அளவில் இந்தியா 70 சதவீத பங்கு வகிக்கிறது. அதன் உற்பத்தியை ஊக்குவிக்க, கடந்த அக்டோபரில் பிரதமர் மோடி அறிவித்தவாறு, தேசிய மஞ்சள் வாரியம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
* உலகின் அதிகளவு மஞ்சள் உற்பத்தியாளர், நுகர்வோர், ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது
* தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் 30 ரகங்களில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது
* 2022-23ல் 3.24 லட்சம் ெஹக்டேர் பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டு 11.61 லட்சம் டன் உற்பத்தியானது