எம்.எஸ்.எம்.இ., பணியாளர்கள் எண்ணிக்கை 27 கோடி பெண்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம்
எம்.எஸ்.எம்.இ., பணியாளர்கள் எண்ணிக்கை 27 கோடி பெண்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம்
ADDED : ஏப் 26, 2025 12:51 AM

புதுடில்லி:நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணியாளர்களின் எண்ணிக்கை 27 கோடியை கடந்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ., என்றழைக்கப்படும் இந்நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு 'உத்யம்' தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தில் இதுநாள் வரை 6.29 கோடி நிறுவனங்கள் பதிவு செய்து உள்ளன.
நடப்பு ஏப்ரல் மாத நிலவரப்படி, இந்நிறுவனங்களில் 27 கோடியே 34,000 பேர் பணியாற்றுகின்றனர். இது, கடந்தாண்டு ஏப்ரலில் 18.50 கோடியாக இருந்தது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பணியாளர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த மொத்த எண்ணிக்கையில், முறைசாரா துறையில் இயங்கி வரும் குறு நிறுவனங்களில் பணியாற்றும் 3.23 கோடி பணியாளர்களும் அடங்குவர். ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத இந்நிறுவனங்களுக்காக, 'உத்யம் அசிஸ்டு' என்ற பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முறைசாரா துறையில் இயங்கி வரும் பணியாளர்கள் போக, மீதமுள்ள 23.70 கோடி பணியாளர்களில் 26 சதவீதம் பேர், அதாவது 6.25 கோடி பேர் பெண்கள். எம்.எஸ்.எம்.இ., துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

