'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை 10,000ஐ எட்டியது
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை 10,000ஐ எட்டியது
ADDED : டிச 23, 2024 12:30 AM

சென்னை:தமிழகத்தில் இருந்து மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறையிடம் பதிவு செய்துள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 10,000ஐ எட்டியுள்ளது.
நாட்டின் இளைஞர்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவக்கி, தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு உதவிகளை செய்கின்றன.
தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம், தமிழக புத்தொழில் ஆதார நிதி, தமிழக பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. முதலீடு, சந்தை வாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தருகிறது.
இதனால், தமிழகத்தில் பலரும், புத்தொழில் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி, தமிழகத்தில் இருந்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை, 10,000ஐ எட்டியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,331 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தில் உள்ள மொத்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில், 49 சதவீதம் பெண்களின் தலைமையில் செயல்படுகின்றன.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமின்றி, திருநெல்வேலி, துாத்துக்குடி என, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன.
தகவல் தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில், அதிகளவில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.