ADDED : டிச 23, 2025 01:07 AM

சேலம்: தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களின், காபி விலையில் தற்போது கிலோவுக்கு, 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக, தொடர்ந்து நீடிக்கும் விலையேற்றத்தால், காபி பிரியர்கள் தவிப்புக்குஉள்ளாகியுள்ளனர்.
கடந்த 2021 - 22ல், முன்னணி நிறுவனங்களின் காபி துாள் விலை அனைத்தும், கிலோவுக்கு, 500 ரூபாய்க்குள் இருந்தது. இரண்டு ஆண்டுகளில், இதன் விலை இரட்டிப்பாக மாறியுள்ளது.
தற்போது பிரபல காபி நிறுவனத்தின் பியூர் பிரீமியம் காபி துாள் கிலோ, 980ல் இருந்து, 1,100 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதேபோல், 'இன்ஸ்டன்ட்' காபி வகைகளும் விலை உயர்த்தப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து 'லட்சுமி காபி' நிர்வாக இயக்குநர் ராகவன் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை, காபி கொட்டை யின் விலை அறுவடை காலங்களில் சிறிது குறைவதும், மற்ற நேரங்களில் சராசரி விலையில் நீடிப்பதும் என்ற நிலை இருந்தது.
பிரேசிலில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக, காபி தோட்டங்கள், 30 சதவீதம் வரை அழிந்து விட்டன. அவை மீண்டும் உற்பத்திக்கு வர பல ஆண்டுகளாகும். இதேபோல், வியட்நாமிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு பின், ஏறத்துவங்கிய காபி கொட்டையின் விலை, மீண்டும் குறையவேயில்லை. அதிகபட்சமாக கடந்த மாதத்தில் கிலோ, 820 முதல், 840 ரூபாய் வரை விலை அதிகரித்தது.
இதை வறுத்து அரைக்கும் போது, 20 சதவீதம் எடையிழப்பு ஏற்படும். பழைய விலையில் வாங்கி ஸ்டாக் வைத்துள்ள நிறுவனங்கள், விலையை அதிகரிக்கவில்லை.
பெரிய நிறுவனங்களை பொறுத்தவரை, அவர்களின் தேவை மிக அதிகம். அதனால், விலையேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். மேலும் போக்குவரத்து செலவு, ஊதியம் உள்ளிட்ட நடைமுறை செலவுகளும் அதிகரித்து விட்டன.
தற்போது அறுவடை துவங்கி, புதிய காபி கொட்டை வரத் துவங்கியுள்ளன. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் இவற்றை பயன்படுத்த முடியும் என்பதால், விலை குறையுமா அல்லது நீடிக்குமா என்பது அப்போதுதான் கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

