கசப்பாக மாறிய சர்க்கரை உற்பத்தி 44சதவீதம் குறைந்தது
கசப்பாக மாறிய சர்க்கரை உற்பத்தி 44சதவீதம் குறைந்தது
ADDED : நவ 18, 2024 12:45 AM

புதுடில்லி:நாட்டின் சர்க்கரை உற்பத்தி, கடந்த அக்டோபர் துவங்கி, ஆறு வாரங்களில் 44 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதுகுறித்து, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2024-25 சாகுபடி ஆண்டின் துவக்கமான அக்டோபரில் இருந்து, நவம்பர் இரண்டாவது வாரம் வரை 7.10 லட்சம் டன்கள். இது கடந்த சாகுபடி ஆண்டின் இதே காலத்தின் உற்பத்தியான 12.70 லட்சம் டன்களுடன் ஒப்பிடும்போது, 44 சதவீதம் குறைவு.
நவம்பர் 15ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில் 144 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இது முந்தைய ஆண்டில் 264 ஆக இருந்தது.
நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில், கரும்பு பிழியும் பணிகளே இன்னும் துவங்கவில்லை. கடந்த ஆண்டின் இதே காலத்தில், அம்மாநிலத்தில் 103 சர்க்கரை ஆலைகள் இயங்கிக் கொண்டிருந்தன.
இதே நிலைதான், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கரும்பு பிழியும் பணியில் குறைந்த அளவிலான ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால், கடந்த சாகுபடி ஆண்டில், 319 லட்சம் டன்களாக இருந்த சர்க்கரை உற்பத்தி, அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையான நடப்பு சாகுபடி ஆண்டில், 280 லட்சம் டன்களாக குறையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.