ADDED : பிப் 13, 2025 10:40 PM

மும்பை:இந்திய விளம்பரச் சந்தை 7 சதவீத வளர்ச்சி காணும் என, ஊடக முதலீட்டுக் குழுமமான 'குரூப்எம்' வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், நாட்டின் விளம்பரத் துறை போக்கு குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்கும் கணிப்புகளை நடப்பாண்டில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:
ஏழு சதவீத வளர்ச்சி யுடன், விளம்பரச் சந்தை 1.64 லட்சம் கோடி ரூபாயை எட்டும். இது கடந்த ஆண்டைவிட 10,730 கோடி ரூபாய் அதிகம். பாரம்பரிய ஊடகங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் நிலையில், மின்னணு ஊடகத்தின் வளர்ச்சி வேகமாக உள்ளது.
ரியல் எஸ்டேட், கல்வி, வங்கி, நிதிச்சேவை, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் விளம்பரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்சார வாகனம், நிதித்தொழில்நுட்பம், கேமிங் ஆகியவற்றின் பங்கும் விளம்பர சந்தையை அதிகரிக்கிறது.
நடப்பு ஆண்டில், அச்சு ஊடகங்கள் மிதமான மீள் எழுச்சியைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு உலகில், பாரம்பரிய அச்சு ஊடகங்களின் பங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.