ADDED : செப் 28, 2025 01:23 AM

நியூயார்க்:உலக நாடுகளின் மொத்த கடன் தொகை, நடப்பாண்டு ஜூலை நிலவரப்படி, இதுவரை இல்லாத சாதனை அளவாக, 338 லட்சம் கோடி டாலர், அதாவது 29,800 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் பைனான்ஸ், ஐ.ஐ.எப்., என்ற அமைப்பின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் கூறியிருப்பதாவது:
சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகளின் கடன் மிக அதிக அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா காலத்தில், உலக நாடுகளின் கடன் அதிகரித்ததற்கு நிகரான உயர்வு. நாடுகளின் ஜி.டி.பி., மற்றும் கடன் விகிதத்தை பார்க்கும்போது, அதாவது, கடனை திருப்பிச் செலுத்தும் திறனுக்கான குறியீட்டை பொறுத்தவரை, கனடா, சீனா, சவுதி அரேபியா, போலந்து ஆகிய நாடுகளின் திறன் அதிகரித்துள்ளது.
அயர்லாந்து, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளில் இந்த விகிதம் குறைந்துள்ளது.